குருச்சி ஏரி புனரமைப்பு 2019 ஆம் ஆண்டில் எங்கள் தன்னார்வ குழுவால் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து "இயற்கையோடு இணைவோம்" என்ற தளத்தின் பெயரில் முன்னெடுக்கப்பட்டது. 14.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருச்சி ஏரி ஆம்பலாப்பட்டு கிராமத்தின் மூன்று முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாகும்.
ஆறு மாத காலத்திற்கு மேலாக 500க்கும் மேற்பட்ட தன்ரார்வலர்கள் தங்கள் சிந்தனை பொருள் மற்றும் உடலுழைப்பின் மூலம் இத்திட்டத்திற்கு பங்களித்தனர். அமெரிக்காவில் உள்ள இந்திய அஸோஸியேஷன் ஆப் சான் அண்டோனியோ மற்றும் சான் அண்டோனியோ தமிழ் சங்கம் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து இம்முயற்சியை துவங்கி வைத்தனர். இதை தொடர்ந்து ஆம்பலாப்பட்டில் இருந்து புலம் பெயர்ந்து உலகம் எங்கும் வாழும் மக்கள் மேலும் 9 லட்சம் பங்களித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆம்பலாப்பட்டு கிராம வாசிகள் 5 லட்சம் கொடுத்து இத்திட்ட மதிப்பீட்டிற்கான 19 லட்ச ரூபாய் சேர்க்க வழிவகுத்தனர்.
இம்முயற்சிக்கு ஏரியை உயிர்தெழுப்புவோம் மற்றும் சபரி பசுமை அறக்கட்டளை ஆலோசகர்களாக ஆரம்பம் முதல் கடைசிவரை எங்களுடன் பயணித்தனர். ஓர் நீர் நிலையில் கொள்ளளவை கூட்டி நீர் தேக்கத்தை அதிக படுத்துவது மட்டும் அல்ல இலக்கு, நீர் நிலைகள் ஒரு பசுமைக்காட்டின் மையமாகவும் பல்லுயிர் வாழும் ஓர் இடமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏரிக்கு நடுவில் ஆம்பல், நெய்தல், மற்றும் மணி குலை என்ற பெயர்களில் மூன்று திட்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் இடத்திட்டுக்களில் "மியாவாக்கி" முறையில் 600 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டன. இது தஞ்சை மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி திட்டம் என்பதனால் தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவை பெற்றது.
ஏரிக்கு ஆறு மற்றும் மழை நீரை கொண்டு வரும் மனாதி வாய்க்கால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்பட்டது. இதற்கான பொருள் தேவையை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "உன்னால் முடியும்" குழு பூர்திசெய்தது.
மேலும் ஏரியை சுற்றி கிராமத்தை சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள்வரை இணைந்து சுமார் 1100 மரக்கன்றுகளை நட்டனர். வனம் குழு மற்றும் ஓம் சக்தி மில்ஸ் ஏராளமான மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்து இந்த முயற்சிக்கு பங்களித்தனர்.
திட்டம் முடிந்த சில நாட்களிலேயே பருவமழை பொழிந்து குறிச்சி ஏரி நிரம்பி ஒரு சிறுகடல் போல் காட்சியளித்தது.
இத்திட்டத்தின் விளைவாக ஏரியின் கொள்ளளவு ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி ஒரு பசுமை போர்வை போர்த்தப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்துள்ளது. இம்முன்னெடுப்பில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் மேலும் சில நீர் நிலைகளை முன்னெடுக்கும் முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆம்பலாப்பட்டு மக்களின் இம்முன்னெடுப்பை அங்கீகரிக்கும் விதத்தில் தமிழக அரசு 2020ம் ஆண்டில் பொதுப்பணித்துறையின் குடிமராமத்து பனியின் கீழ் ஒரு கோடியே 60 லட்சம் செலவில் ஆண்டாள், குரும்பை மற்றும் குறிச்சி ஏரிகளுக்கான உள்கட்டமைப்பை மேம் படுத்த நிதி ஒதுக்கி வேலைகள் செவ்வனே நடந்து கொண்டிருக்கிறது.