ஆம்பலாப்பட்டு

ஆம்பலாப்பட்டு

காவிரி படுகையில் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று ஆம்பலாப்பட்டு. இக்கிராமம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2,000 குடும்பங்களும் 10,000 மனிதர்களும் வாழ்ந்து வருகிறார்கள். விவசாயமே இம்மக்களின் முதன்மை தொழில்.

இரெண்டு தலைமுறைக்கு முன்பு வரை மூன்று போகம் விளைவித்த மக்கள் நாளடைவில் காவிரி நீர் வரத்து குறைந்ததினாலும் நீர் மேலாண்மையின் மீது போது மான கவனம் செலுத்தாதினாலும் நிலத்தடி நீர் குறைந்து விவசாயிகள் ஒரு போகம் நெல் விவசாயமும் வாய்ப்பு இருப்பவர்கள் தென்னை விவசாயமும் செய்துவருகிறார்கள.

இந்நிலையில் 2018ல் கஜா புயலின் தாக்கத்தினால் இக்கிராமம் தன் பசுமையில் ஒரு பகுதியை ஒரே இரவில் இழந்தது. இப்பேரிடர் சூறையாடியது கிராமத்தின் பசுமையை மட்டும் அல்ல தென்னை விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருந்த பல விவசாயிகளின் வாழ்க்கையையும் தான். முன்பே நிலத்தடி நீர் குறைந்ததினாலும் விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததினாலும் விவசாயத்தில் இருந்து மெல்ல வேறு தொழிலுக்கு நகர்ந்து கொண்டிருந்த கிராம மக்களின் நகர்வுக்கு கஜா புயலினால் ஏற்பட்ட தாக்கம் மேலும் வேகம் சேர்த்திருக்கிறது.

இக்கிராமத்தில் 5 ஆரம்ப நிலை பள்ளிகள் 2 நடு நிலை பள்ளிகள் மற்றும் 1 மேல் நிலை பள்ளியையும் சேர்த்து 8 அரசு பள்ளிகள் இருக்கிறது. இதில் படித்த மாணவர்கள் கடந்த இரண்டு தலைமுறையில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மிக பெரிய வெற்றிகள் கண்டுள்ளனர். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரம் குன்றி இன்று மாணவர் எண்ணிக்கை 85% வரை குறைந்துள்ளது. தரமான கல்வி வேண்டும் என்றால் தனியார் பள்ளிக்கூடத்திருக்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இது வசதி வாய்ப்பு இல்லாத நிறைய குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சுமையாக அமைந்துள்ளது.

விவசாயத்திலும் தோட்ட கலையிலும் கொடி கட்டி பரந்த குடி தமிழ் குடி. இதில் குறிப்பாக தஞ்சை விவசாயிகள் பேர்போனவர்கள். கடந்த இரண்டு தலைமுறையில் வளர்ச்சி என்ற பெயரில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான விவசாய நிலங்களை ஆட்கொண்டிருக்கிறது. ஆம்பலாப்பட்டு இதற்கு ஒரு விதிவிலக்கல்ல. இதன் விளைவாக இக்கிராமத்திலும் மண்ணின் வளம் குறைந்து உணவில் நஞ்சு தன்மை கூடி விவசாயிகளின் பணச்சுமை அதிகரித்துள்ளது.

மேலே குறிப்பிட்டிருக்கும் இப்பிரச்னைகளில் இருந்து மடைமாற்றி அடுத்த பத்து ஆண்டுகளில் ஆம்பலாப்பட்டை ஒரு தன்னிறைவு கிராமமாக மாற்ற கீழ்கண்ட இலக்குகளை நோக்கி சீதனம் அறக்கட்டளை பயணிக்கவுள்ளது.

  • ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து கிராமத்தின் பசுமையை கணிசமாக கூட்டுவது
  • அனைத்து நீர் நிலைகள் மற்றும் நீர் வழி பாதைகளை புனரமைத்து கிராமத்தை ஓர் நீர் மிகை கிராமமாக மாற்றுவது
  • ரசாயன உரம் அற்ற பூச்சி கொல்லி மருந்தற்ற இயற்கை விவசாய கிராமமாக மாற்றுவது
  • ஆரோக்கியமான உடல் தெளிவான மனதோடு அனைவரும் வாழ வழி செய்வது
  • எட்டு அரசு பள்ளிகளையும் தரம் வாய்ந்த கல்வி விளையாட்டு மற்றும் கலைகள் வளர்க்கும் இடமாக மாற்றுவது