உயிர்த்துளி
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
- குறள், 16
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.
உலக உயிர்க்கு நீரே ஆதாரம்.
ஆம்பலாப்பட்டு கிராமத்திலுள்ள சுமார் 40 நீர்நிலைகளையும், அதன் நாடியான நீர்வழிப்பாதகளையும் புனரமைத்து நீர் கொள்ளவை அதிகப்படுத்தி இக்கிராமத்தை ஓர் நீர் மிகை கிராமமாக மாற்றுவதை சீதனம் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது.

பிரச்னை: "கானல் நீர்"
பாரம்பரிய நீர் மேலாண்மையை இடைக்காலத்தில் பின்பற்றாதது, இயற்கைக்கு மாறான விவசாய முறை, ஆழ்துளை கிணறுகள், கட்டுப்பாடற்ற நீர் பயன்பாடு என பல காரணிகளால் நிலத்தடி நீர் மட்டம் வீழ்ந்தது. நீர் நிலைகளும் நீர் வழிப்பாதகளும் வறண்டும் தூர்த்தும் போயின.
தீர்வு: "முதல் சொட்டு"
காவிரி நீர் வரத்து ஒரு சில ஆண்டுகளில் வழக்கத்தை விட குறைந்தாலும் இயற்கை அன்னை பெரும்பான்மையான ஆண்டுகளில் கிராமத்திற்கு தேவையான அணைத்து நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் மழையாக பொழிகிறாள். அம்மழை நீரை சரியான முறையில் சேமித்து பயன்படுத்தினாலே கிராமத்திற்க்கு தேவையான அணைத்து நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் என்பது சீதனம் தன்னார்வ குழுவின் நம்பிக்கை.
இதுவரை என்ன செய்துள்ளோம்: "நீர்த்தடம்"
நீர்நிலைகளை புனரமைக்கும் பணியில் சீதனத்தின் முதல் துளியாக "இயற்கையோடு இணைவோம்” எனும் தன்னார்வலர் தளத்தின் மூலம் 2019-ல் சுமார் 14.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி ஏரியை ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுடன் கைகோர்த்து புனரமைத்தோம்.
மேலும் விவரங்களுக்கு குறிச்சி ஏரி புனரமைப்பு பகுதியை "திட்டங்கள்" தலைப்பின் கீழ் காணலாம்
அடுத்து என்ன செய்யவுள்ளோம்: "நீர்த்தட பயணம்"
சீதனத்தின் நீர் பயணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆம்பலாப்பட்டில் உள்ள ஒரு சில நீர் நிலைகள் அல்லது நீர் வழி பாதைகளை புனரைமைக்க திட்டமிட்டுள்ளோம். இம்முயற்சியில் முக்கியமாக நீர் தடையின்றி ஓட நீர் வழிப்பாதையின் தடைகளை அகற்றுதல் மேலும் நீர் நிலைகளின் கொள்ளளவை கூட்ட கழிவுகளை அகற்றுதல், தூர்வாருதல், கரையை பலப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகளை செய்யவுள்ளோம்.
சுழற்சி முறையில் விவசாயம் செய்வது, சொட்டு நீர் பாசனத்தை உபயோகிப்பது, கூட்டுறவு முறையில் நிலத்தடி நீரை உபயோகிப்பது, விவசாய நிலத்திற்கு அருகே ஆங்காங்கே பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை கிராம விவசாயிகளுடன் கைகோர்த்து நடைமுறை படுத்த முயற்சிக்கவுள்ளோம்.
மண் வளம், நீர் வளம் பெருக விவசாய நிலங்களை சுற்றி மரம் வளர்ப்பது. மக்களுக்கு, குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, நீர் விரயத்தை தவிர்ப்பது போன்ற விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை இயற்கை பாதுகாவலராக உருவாக்க முயற்சிக்கவுள்ளோம்