ஒரு தாய் தன் குழந்தையை கருவினில் சுமந்து பெற்றெடுத்து சீராட்டி பாலூட்டி மடியிலும் தோளிலும் தூக்கி வளர்த்தெடுக்கிறாள். அவள் பெற்ற குழந்தை பெண்ணாக இருந்தால் அவள் போகுமிடத்தில் சுகமாக வாழ சீதனம் தருகிறாள். குழந்தை தாய்க்கு என்ன கைமாறு செய்துவிட முடியும்? வளர்ந்த பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு சீலையை வாங்கி கொடுக்க முடியும். அது அவள் பிள்ளைக்கு கொடுத்த அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடாகாது என்றாலும் அச்செயல் பிள்ளைக்கு ஒரு மன நிறைவை அளிக்கும். அப்படியொரு முன்னெடுப்பதுதான் சீதனம் அறக்கட்டளை - இது சேய் தாய்க்கு தரும் சீதனம்.
இயற்கையான சூழல் அன்பான மனிதர்கள் ஆரோக்கியமான சமுதாயம் இத்துடன்
பொருளாதாரத்தில் தன்னிறைவு நம் தலைமுறையை தாண்டி அடுத்தடுத்த தலைமுறையினருக்கும்
கிடைக்கவேண்டும் என்ற கனவுடன் உருவானதுதான் சீதனம் அறக்கட்டளை. இது ஒரு தனி
மனித சிந்தனையாலோ தனி மனித உழைப்பாலோ உருவானது அல்ல. மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் மண்டபத்தை தாங்கும் ஆயிரம் தூண்கள் போல பல தன்னார்வலர்களின் கனவினாலும்
உழைப்பினாலும் சீதனம் அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஓராயிரம் மைல்கள் பயணம் ஓரடியில் துவங்குகிறது!
- சீன பழமொழி
இந்தியாயவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இயற்கை வளத்தை பேணி காக்க வேண்டும்
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும் கிராம மக்கள் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி,
வேலைவாய்ப்பு, மற்றும் கலைகளில் தழைத்தோங்கி வளரவேண்டும் என்பது பெருங்கனவு.
இக்கனவை நினைவாக்கும் எங்கள் பயணத்தின் ஆரம்ப புள்ளி ஆம்பலாப்பட்டு கிராமம்.
ஒரு கிராமத்தை தன்னிறைவை நோக்கி நகர்த்துவதினால் மற்ற கிராமங்களுக்கு அது ஒரு
உந்துதலாகவும் எடுத்துக்காட்டாகவும் அமையும் என்பது எங்கள் நம்பிக்கை.